Thursday, November 20, 2008

வெளிநாட்டில் மேல்படிப்பு - GREக்கு படிப்பது

GRE தேர்வில் மூன்று பகுதிகள் உண்டு. ஒன்று verbal என்ற ஆங்கிலம் பற்றியது. இரண்டாவது quants என்ற கணிதம் பற்றியது. மூன்றாவது analytical என்ற பொது IQ பற்றியது. இரண்டாவதும் மூன்றாவதும் ஒரு மாதம் படித்தாலே போதும். முதல் பகுதிக்கு மட்டும் நன்றாக படிக்க வேண்டும்.

முதல் பகுதியில் ஒரு சொல்லுக்கு சமமான் அர்த்தம் (synonym) எதிர்ப்பொருள்(antonym) ஒரு பத்தியை படித்து அதைப்பற்றிய கேள்விகளுக்கு விடை எழுதுதல்(comprehension)ஆகியவை இருக்கும். இவற்றில் ஆங்கிலத்தில் கடினமான வார்த்தைகள் இருக்கும். நன்றாக தயார் செய்தால் மட்டுமே இதில் நல்ல மார்க் எடுக்க முடியும்.

வார்த்தைகளை ‘சும்மா தட்டினால்' ஓரளவுதான் மனப்பாடம் செய்ய முடியும். இவை நன்கு மனதில் பதிய வேண்டினால் என்ன செய்ய வேண்டும்?

Reader's Digest என்ற ஆங்கில மாதப்பத்திரிகை வாங்கி அதில் இருக்கும் கதைகளைப் படிக்கத் தொடங்குங்கள். அதில் கடினமான வார்த்தைகள் பல வரும். அவற்றிற்கு சரியான அர்த்தம் தெரியாவிட்டாலும், மொத்த வாக்கியத்தின் அர்த்தம் பெரும்பாலும் புரியும். நாம் எல்லோருமே அப்படிப்பட்ட சமயங்களில், கதை புரிந்தால் போதும் என்ற மனப்பான்மையில் விட்டு விடுவோம். அந்த இடத்தில் அர்த்தம் புரியும், அல்லது நாம் ஒருமாதிரி கற்பனை செய்து கொள்வோம். வேறு ஒரு சமயத்தில் அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் கேட்டால் நமக்கு தெரியாது.

ஒரு முறை புத்தகம் முழுதும் படித்த பின்னால், நமக்கு எந்த எந்த கதைகள் பிடித்திருக்கிறதோ, அதை மீண்டும் ஒருமுறை நிதானமாகப் படிக்க வேண்டும். ஒவ்வொரு வரியிலும் எந்த வார்த்தைக்கு அர்த்தம் துல்லியமாக தெரியவில்லையோ அதை ஒரு நோட்டில் எழுதி, அதன் அர்த்தத்தை டிக்சனரியில் பார்த்து பக்கத்தில் எழுத வேண்டும். அடுத்து, அந்த கதையில் வரும் அந்த முழு வாக்கியத்தையும், நோட்டில் எழுத வேண்டும். இப்படி கதையை படிக்கும்பொழுது, ஒரு கதை படிக்கவே நிறைய நேரம் ஆகும். ஆனால் இதில் படிக்கும் வார்த்தைகள் மனதில் நிற்கும்.

ஏன்?

Barron's புக்கில் (அல்லது அது போன்ற புத்தகத்தில்) இருப்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத வார்த்தைகள். இப்படி படிப்பது நினைவில் இருக்காது. ஆனால், நாம் அனுபவித்துப் படித்த கதையும், அதன் வாக்கியங்களும் மனதில் அதிக நாள் நிற்கும். நீங்கள் இப்படி எழுதும் நோட் தான் உங்கள் Barons' guide. இதை இரண்டாம் ஆண்டிலிருந்து நீங்கள் செய்து வந்தால் பின்னர் GREக்கு இரண்டு மாதம் முன்னால் இந்த நோட் படித்தால் உங்களுக்கு ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கதை சொல்லும். அந்த வார்த்தையைப் பார்த்த உடனே உங்களுக்கு அந்த வாக்கியமும் கதையும் நினைவுக்கு வரும்.

ஏன் Reader's Digest?

இது தான் வேண்டும் என்பது இல்லை. ஆனால் இது போன்ற தரம் இருக்கும் எந்தப் பத்திரிகையும் ஓகே. மாதப் புத்தகம்தான் சரி, தினசரி பேப்பர் சரிவராது. ஏனென்றால் ஒரு மாதம் கழித்து பேப்பர் போய்விடும். புத்தகம் என்றால் இரண்டு வருடம் கழித்துக் கூட நீங்கள் மீண்டும் அந்த கதைகளை படிக்கலாம்.

இதற்கு பதில் Sidney Sheldon போன்ற புத்தகம் படிக்கலாமா? படிக்கலாம், ஆனால், மாதப் பத்திரிகையில் பலரும் பல வித எழுத்து நடையில் எழுதுவார்கள். அதனால் மாதப் பத்திரிகை கொஞ்சம் better.

இப்படி படித்தாலும், கடைசியில் கொஞ்சம் ஓரிரு மாதங்கள் Barons படிக்கவும். விட்டுப் போன சில வார்த்தைகளை ‘தட்டி' மார்க் வாங்கலாம். ஆனால் நோட் போட்டு எழுதியதில் அடிப்படை கொஞ்சம் strongஆக இருக்கும்.

இந்த முறையில் செய்ய குறைந்தது தேர்வு எழுத 6 மாதங்கள் முன் ஆரம்பிக்க வேண்டும். முடிந்தால் இரண்டாம் ஆண்டு முதல் தயார் செய்ய தொடங்குங்கள். ஆனால் இரண்டாம் ஆண்டு முதல் பேரன்ஸ் படிக்க வேண்டாம்! ஒரு அர்த்தமில்லாமல் மனப்பாடம் செய்த வார்த்தைகள் சில மாதங்களில் மறந்துவிடும். அதனால் பேரன்ஸ் புத்தகத்தை தேர்வுக்கு 2,3 மாதங்களுக்கு முன் படித்தால் போதும்.

அடுத்து ‘GRE படிப்பது தவிர வேறு என்ன வழிகளில், வெளிநாட்டு படிப்பு, ஸ்காலர்ஷிப் நமக்கு கிடைக்கும் சான்ஸை அதிகப்படுத்தலாம்' என்பது பற்றி பார்க்கலாம்.

No comments: