இந்தப் பதிவில் ‘ஒரு அமெரிக்க ப்ரொஃபசரின் எதிர்பார்ப்பு என்ன' என்பதைப் பார்க்கலாம். அமெரிக்காவில் வேலை செய்யும் ப்ரொஃபசரின் முக்கிய நோக்கம் என்ன என்றால், ‘நிறைய ஆராய்ச்சி கட்டுரை என்ற journal paper எழுத வேண்டும். நிறைய ப்ராஜக்ட் பணம் வாங்க வேண்டும்' என்பதாகும். அதை வைத்துதான் அவரது ‘நிலை' (status) அதிகமாகும்.
ஒரு சிறு குறிப்பு: இங்கு இந்தியாவில் பல தனியார் எஞ்சினியரிங் காலேஜ்களில், BTech முடித்து வேறுவேலை கிடைக்காதவர்களை ஆசிரியர் வேலைக்கு எடுத்திருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் அல்லது ஐரோப்பாவில் ‘பேராசிரியர்' வேலை மிக அதிக ‘கௌரவம்' உடையது. அதனால், கம்பெனியில் வேலை கிடைப்பதை விட கல்லூரியில் வேலை கிடைப்பது மிக மிகக் கடினம்.பேராசிரியர் வேலையில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் மிகத் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அங்கு அவர்களுக்கு கம்பெனியில் அதிக சம்பளம் உள்ள வேலை சுலபமாகக் கிடைத்திருக்கும், ஆனாலும் ”வேண்டாம்” என்று சொல்லி விட்டு கல்லூரிக்கு வந்திருப்பார்கள்.
இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், அப்படி வந்தவர்களுக்கு ஈகோ முக்கியம். அதனால், ‘நான் நிறைய ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கிறேன்' என்று சொல்வது அவர்களுக்கு மிக முக்கியம். 'நான் ரொம்ப பணக்காரன்' என்று சொல்வது அவ்வளவு முக்கியம் இல்லை.
அவர்கள் ஆராய்ச்சி கட்டுரை எழுத மாணவர்கள் செய்யும் ரிசர்ச் வேலை முக்கியம். ஒரு மாணவனை ‘எடுக்கலாமா வேண்டாமா' என்பதை முடிவு செய்ய, ‘இவரை எடுத்தால் நிறைய ஆராய்ச்சி கட்டுரை எழுத முடியுமா' என்பதுதான் பேராசிரியர் மனதில் முக்கிய கேள்வியாக இருக்கும். மற்ற விஷயங்கள், எடுத்துக்காட்டாக “மாணவன் நன்றாக விளையாடுவாரா” என்பது முற்றிலும் தேவையில்லாத ஒன்று. மாணவர் அங்கு வந்து க்ளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கினால் கூட அவருக்கு ரொம்ப பயனில்லை. கொஞ்சம்தான் பயன் . ” க்ளாஸ் ஃபர்ஸ்ட் மாணவன் என்னிடம் வேலை செய்கிறான், நான் கைடாக இருக்கிறேன்” என்று சொல்லும் பெருமைதான் அவருக்கு அந்த சிறிய பயன்.
உங்கள் GRE மார்க்கும், கல்லூரி ரேங்க்கும், ரெகமண்டேசன் லெட்டரும் ஒரே ஒரு நோக்கத்தில்தான் பார்க்கப்படும். ‘இந்த மாணவர் நம்மிடம் வேலை செய்தால் ஆராய்ச்சி கட்டுரை நிறைய வருமா?”
GREஐ வைத்து, கல்லூரி ரேங்கை வைத்து, லெட்டரை வைத்து ஓரளவுதான் சொல்ல முடியும். இதற்கு முன் உங்கள் கல்லூரியில் இருந்து ஒரு மாணவர் அங்கு போய் நன்றாக வேலை செய்தால், ‘இந்த முறையும் நன்றாக வர வாய்ப்பு உண்டு' என்ற எண்ணத்தில் அவர்கள் ஸ்காலர்ஷிப் கொடுப்பார்கள்.
இதற்கு மாறாக, இங்கே ஒரு ப்ரொஃபசர் 'இந்த பையன் சூப்பர்' என்று எழுதி, அங்கே போய் அவன் ஊத்திக்கொண்டால், அடுத்து அந்த ப்ரொபசரின் லெட்டருக்கு மதிப்பு இருக்காது. அடுத்து சில வருடங்களில் , அந்த இந்திய கல்லூரியில் இருந்து மாணவர்களை எடுக்கத் தயங்குவார்கள்.
சரி, இதற்கு முன் உங்கள் கல்லூரியில் இருந்து யாருமே போகவில்லை, அல்லது நீங்கள் அமெரிக்காவில் அப்ளிகேசன் போடும் கல்லூரியில் யாரும் போகவில்லை என்றால் என்ன செய்வது?
இங்கே க்ளாஸ் படிப்பைத் தவிர வேறு எந்த வழியிலாவது ஆராய்ச்சி செய்து, ஆராய்ச்சி கட்டுரை எழுதினால், அது மிகப் பெரிய அளவில் உங்கள் அப்ளிகேசனுக்கு மதிப்பை கூட்டும். ‘பையன் ஏற்கனவே இதில் திறமையுடன் இருக்கிறான், இங்கே வந்தாலும் நன்றாக செய்வான்' என்ற எண்ணம் இருக்கும். GRE மார்க், க்ளாஸ் ரேங்க் எல்லாமே கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. ரெகமண்டேசன் லெட்டர் மோசமாக் இருந்தால் மட்டுமே பாதிப்பு . ‘இந்த பையன் ரொம்ப பிரச்சனை செய்வான்' என்று லெட்டரில் இருந்தால் எடுக்க மாட்டார்கள். ரெகமண்டேசன் மோசமாக இல்லாவிட்டால் உங்கள் வாய்ப்பு நிச்சயம் நன்றாக இருக்கும்.
சரி, ஆராய்ச்சி கட்டுரை எழுதுவது எப்படி? பெரும்பாலான் ஆராய்ச்சிக்கு ‘கவனமும், பொறுமையும் விடா முயற்சியும்' தான் தேவை. ஓரளவு புத்திசாலித்தனம் போதும், அதிபுத்திசாலித்தனம் தேவையில்லை. இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, இதுதான் உண்மை. பல மாணவர்கள் ‘ப்ராஜக்ட்' செய்கிறேன் பேர்வழி என்று எதாவது ஆரம்பிப்பார்கள்.ஆனால் அது நினைத்த படி போகாவிட்டால் ஓரிரு வாரங்களில் உற்சாகத்தை இழந்து நிறுத்தி விடுவார்கள். உங்களுக்கு ரொம்ப லக் இருந்தால்தான் முதல் முறையிலேயே வேலை செய்யும். கொஞ்சம் யொசித்துப் பாருங்கள், உருப்படியான ப்ராஜக்ட் முதல் முறையே வந்தால், அது ‘ப்ராஜெக்டே' அல்ல, அது ஒரு க்ளாஸ் ப்ராப்ளம்தான். அவ்வளவு சுலபமாக வராததால்தான் ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது. ஒருநாள் ஜிம் போய் வெய்ட் தூக்கி, அடுத்த நாள் கண்ணாடியில் பார்த்தால், பாடி டெவலப் ஆகி இருக்காது. அதே சமயம், பொறுமையாக ஆறு மாதம் சென்று உடற்பயிற்சி செய்தால் கண்டிப்பாக பலன் உண்டு. ஆராய்ச்சி ஏறக்குறைய அதுபோலத்தான். புத்திசாலித்தனம் அதிகம் இருந்தால், ஆறுமாதத்தில் ரிசல்ட் வருவதை நான்கு மாதத்தில் கொண்டு வரலாம், அவ்வளவே.
இது மட்டும் போதாது, நல்ல ஒரு ப்ராப்ளமும், ரிசல்ட் வந்த பின் அதை நல்ல முறையில் எழுதி பப்ளிஷ் செய்வதும் வேண்டும். ஆராய்ச்சி கட்டுரையில் இரண்டு வகை உண்டு. ஒன்று கான்பரன்ஸ், இரண்டாவது ஜர்னல். இது பற்றிய விவரங்களை அடுத்து பார்க்கலாம். பின்னர், எங்கே போய் ஆராய்ச்சி செய்வது, எப்படி முயற்சி செய்வதால் பலன் அதிகம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment