Thursday, November 20, 2008

வெளிநாட்டில் மேல்படிப்பு படிப்பது பற்றி

இந்தப் பதிவில், வெளிநாட்டில் எஞ்சினியரிங் மாணவர்கள் மேல் படிப்பு படிப்பதற்கு எப்படி தங்களை தயார் செய்து கொள்ளலாம் என்பது பற்றி எனக்கு தெரிந்த சில விவரங்களை எழுதுகிறேன்.
இது பொறியியல் (Engineering) மாணவர்களுக்கு, குறிப்பாக முதல் மூன்று வருடங்களில் இருக்கும் மாணவர்களுக்கு உதவலாம்.

நீங்கள் நான்கு வருடம் பொறியியல் படித்து விட்டு மேல்படிப்பிற்கு அமெரிக்காவிற்கு செல்ல விரும்பினால், அதற்கு இரண்டாம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து கொள்வது நல்லது. மேல்படிப்பிற்கு ஸ்காலர்ஷிப்புடன் போக மூன்று விஷயங்கள் தேவை
  1. ஓரளவு நல்ல கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும்
  2. GRE என்ற தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும்
    • கூடவே TOEFL என்ற தேர்வும் எழுத வேண்டும். ஆனால் GREக்கு நன்றாக படித்தால், TOEFL சுலபமாக எழுதலாம்

  3. கல்லூரி பேராசிரியரிடம் நல்ல Recommendation Letter வாங்க வேண்டும்


1. கல்லூரியில் படித்து நல்ல மதிப்பெண் வாங்குவது உங்கள் கையில். ‘ஓரளவு நல்ல கல்லூரி' என்றால் என்ன? நீங்கள் சேர்ந்திருக்கும் கல்லூரியில் இருந்து ஏற்கனவே சீனியர்கள் வெளிநாட்டுக்கு போயிருந்தால் (அவர்கள் அங்கு ஓரளவு நன்றாக படித்தால்) உங்களுக்கு வாய்ப்பு அதிகம். இதை ‘ஓரளவு நல்ல கல்லூரி' என்று சொல்லலாம். அப்படி இல்லாவிட்டால், நீங்கள்தான் தொடங்க வேண்டும்!

2. GRE என்பதற்கு எப்படி படிப்பது. இது பற்றி தமிழில் பதிவுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் நிறைய இருக்கும். இந்த தேர்வில் மூன்று பகுதிகள் உண்டு. இதில் கடினமானது verbal என்ற ஆங்கிலப் பகுதிதான். இதில் நல்ல மார்க் எடுக்க ஆங்கிலத்தில் பல கடினமான வார்த்தைகளுக்கு பொருள் தெரிய வேண்டும். பல வார்த்தைகளை மனப்பாடம் செய்து ஓரளவு ஒப்பேத்தலாம். இதற்கு Barron's guide என்றும் வேறு சில புத்தகங்களும் இருக்கின்றன. ஆனால், இதைவிட சிறப்பாக செய்ய வழி உண்டு. (அடுத்த பதிவில்)

3. கல்லூரி ஆசிரியரிடம் நல்ல Recommendation Letter. நன்றாக படித்து, ரொம்ப ரகளை செய்யாவிட்டால் இது கிடைக்கும். ஆனால், உங்கள் கல்லூரி பேராசிரியரை அமெரிக்க கல்லூரியில் இருப்பவர்களுக்கு தெரியாவிட்டால், இதற்கு அவ்வளவு மதிப்பு இல்லை. இந்த நிலையில், ரெகமண்டேஷன் சரியில்லை என்றால் உங்கள் அப்ளிகேஷன் ஒதுக்கப்படும். ஆனால், ரெகமண்டேஷன் நன்றாக இருந்தால் அதை கண்டுகொள்ள மாட்டார்கள்.

இது தவிர வேறு சில வழிகளில் உங்கள் சான்ஸை அதிகமாக்கலாம். அவை என்ன என்பதை பார்க்கும் முன்னால், ஒரு அமெரிக்க கல்லூரி பேராசிரியர், தன்னிடம் வரும் மாணவர் “என்ன திறமைகளை கொண்டிருக்க வேண்டும்” என்று எதிர்பார்ப்பார் என்பதை பார்க்கலாம். அதை சரியாக புரிந்து கொண்டால், நாம் எதை முன்னிறுத்த வேண்டும் (emphasize செய்ய வேண்டும்) என்பது சுலபமாக விளங்கிவிடும்.

No comments: