Wednesday, March 25, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை- பகுதி 3

சில தனியார் கல்லூரிகள், ‘100% ப்ளெஸ்மெண்ட்' இல்லாதபோதே, இருப்பது போல காண்பிக்கும். இதற்கு ஒரு குறுக்கு வழி உண்டு. இப்படி காண்பித்தால், புதிதாக வரும் மாணவர்கள்/பெற்றோர்கள் ‘சரி, இங்கே படித்தால், படித்து முடித்ததும் வேலை கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையில், டொனேசன் கட்டி சேருவார்கள்.

கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் (அதாவது கல்லூரி வழியாக வேலை கிடைப்பது) என்பது அண்ணா பல்கலைக் கழகம் நடத்துவது. அண்ணா பல்கலையின் கீழே இருக்கும் மாணவர்களை பல கம்பெனிகள் வந்து தேர்வு மற்றும் இண்டெர்வியூ வைத்து வேலைக்கு எடுத்துக் கொள்ளும். வேலைக்கு எடுத்துக் கொள்ளும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக் கழகம் மூலம் லெட்டர் கொடுக்கும். இதனால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், ‘இந்தக் கல்லூரியில், இந்தப் பிரிவில் இத்தனை மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது' என்ற புள்ளி விவரம் கிடைக்கும்.

இதில் எப்படி ஏமாற்ற முடியும்?

ஒரு எடுத்துக் காட்டாக “தில்லாலங்கடி காலேஜ்' என்று ஒரு காலேஜ் நான் நடத்துவதாக வைத்துக் கொள்வோம். எனது கல்லூரி மாணவர்களுக்கு ப்ளேஸ்மெண்ட் காண்பிக்க, என் நண்பரையோ அல்லது உறவினரையோ வைத்து “டுபாக்கூர் கம்பெனி' என்ற பெயரில் ஒரு கம்பெனியை ரெஜிஸ்டர் செய்து விடுவேன். அண்ணா பல்கலைக் கழகத்தில் சில ஆயிரங்கள் கட்டி விட்டு, அந்தக் கம்பெனி முதலாளியாக நண்பர் வந்து, என் கல்லூரி மாணவர்கள் பலருக்கு வேலை கொடுத்துவிட்டு போய் விடுவார். லெட்டரில் “மே மாதம் 15ம் தேதி வந்து சேர்ந்து விடுங்கள், உங்கள் சம்பளம் மாதம் 15 ஆயிரம் ரூபாய்” என்று இருக்கும். மாணவர்களும் ‘வேலை கிடைத்து விட்டது' என்ற மகிழ்ச்சியில் இருப்பார்கள்.

என்னைப் பொறுத்த வரை ” எங்கள் கல்லூரியில் எல்லா மாணவர்களுக்கும் வேலை கிடைத்து விட்டது, 100% ப்ளேஸ்மெண்ட். எங்கள் கல்லூரி மிகச் சிறந்த கல்லூரி” என்று வெளியில் சொல்லி விடுவேன்.

ஆனால் மாணவர்களுக்கு மே மாதம், இன்னோரு லெட்டர் வரும். ‘கம்பெனி நிலை சரியில்லாததால், அக்டோபர் 1ம் தேதி வந்து சேருங்கள்' என்று சொல்லும். அக்டோபரில் “அடுத்த ஜனவரி சேருங்கள்' என்று இன்னொரு லெட்டர் வரும். நேரில் போய் விசாரித்தால், ‘இப்போது வசதி இல்லை, வேண்டுமானால் சம்பளம் இல்லாமல் 3 மாதம் ட்ரெய்னிங் இருங்கள் பார்க்கலாம்' என்று சொல்வார்கள். மாணவர்களே வெறுத்துப் போய் வெளியே வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்வார்கள். மறுபடி இந்த டுபாக்கூர் கம்பெனி அண்ணா பல்கலைக்கு போய், அடுத்த பேட்ச் மாணவர்களுக்கு இண்டெர்வியூ வைக்கும். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுப்பது போல, ஒவ்வொரு கேம்பஸ் ப்ளேஸ்மெண்டிலும் போய் ”நிறைவேற்ற மாட்டோம்” என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டே லெட்டர் கொடுக்கும்.

மாணவர்கள் கல்லூரி விட்டு வெளிவந்த பிறகு ”இந்த கம்பெனி இப்படி அலைக்கழிக்கிறது” என்று அண்ணா பல்கலைக் கழகத்திற்கு போய் கம்ப்ளெய்ண்ட் கொடுப்பதற்கு பதிலாக வெறுத்துப் போய் விட்டு விடுவார்கள். அதிகம் பேர் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால், விவரம் மீறிப் போனால், இந்த டுபார்க்கூர் கம்பெனியை கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் வராமல் தடுக்கலாம். ஆனால், அதே ஆள் இன்னொரு கம்பெனி பெயரில் இதே வேலையை செய்வதை அவ்வளவு சுலபமாகத் தடுக்க முடியாது.

சரி, இது மோசமான கல்லூரிக்கு அறிகுறி. எதை வைத்து ஒரு கல்லூரியை ‘இது நல்ல கல்லூரி' என்று சொல்வது?

Monday, March 23, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை- பகுதி 2

தமிழக எஞ்சினியரிங் கல்லூரிகள் பற்றிய சில விவரங்களையும், மதிப்பீடுகளையும் பார்க்கலாம்.

டிஸ்கி: இந்த விவரங்கள் ‘காத்து வாக்கில்' வந்த செய்திகளை வைத்து எழுதுவது. குறிப்பாக சில விவரங்களை சொன்னவர்கள், அவர்கள் பெயர்கள் வெளி வருவதை விரும்பவில்லை. “அவர்கள் நேர்மையாகவும் சரியாகவும் சொல்லுகிறார்கள், அவர்களுக்கு விவரம் நன்றாகத் தெரியும்” என்ற நம்பிக்கையில் நான் இங்கு எழுதுகிறேன்.

1. அரசு கல்லூரிகள் அனைத்தும் ஒரே லெவலில் இருப்பதில்லை. எ.கா. கோயம்புத்தூரில் இருக்கும் அரசு கல்லூரி, பருகூரில் இருக்கும் அரசு கல்லூரியை விட பல மடங்கு சிறந்தது. இது பற்றி மேலும் விவரங்களைப் பின்னர் பார்க்கலாம்.

2. சில தனியார் கல்லூரிகள் சில அரசு கல்லூரிகளை விட பரவாயில்லை.

3. தனியார் கல்லூரியில் ஒன்றான ‘சி.ஐ.டி' என்ற கோயம்புத்தூர் இன்ஸ்டிடுட் ஆஃப் டெக்னாலஜி' தனது எல்லா சீட்டுக்களையும் அரசுக்கே தந்து விடுகிறது. இதில் மேனேஜ்மெண்ட் கோட்டா என்பது கிடையாது. (இவ்விவரம் சரியா என்று நிச்சயமாகத் தெரியவில்லை).

4. சென்னையில் இருக்கும் ‘எஸ்.எஸ்.என்' என்ற ‘சிவசுப்ரமணியம் நாடார் கல்லூரி'யில் டொனேசன் வாங்குவதில்லை. தனியார் மேனேஜ்மெண்ட் வழியில் மாணவர்களை ‘எக்சாம்' வைத்து எடுக்கிறார்கள். பணம் கொடுத்து சீட் வாங்க முடியாது. நன்றாக மார்க் வாங்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள்.

5. 'ஈ.சீ.ஈ' என்ற எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் பிரிவைத்தான் மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதனால், டொனேசனுக்கும் அதற்குதான் அதிகம். 3 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை நல்ல பெயர் வாங்கிய தனியார் கல்லூரிகளில் கேட்கிறார்கள்.

6. தனியார் கல்லூரி/ ‘பல்கலை'யில், மார்க் வரும் முன்னரே நீங்கள் கொஞ்சம் ‘அட்வான்ஸ்' கொடுத்தால், சீட் புக் செய்து கொள்ளலாம். மார்க் வந்த பின், கவுன்சலிங் வரும் முன்னும் புக் செய்து கொள்ளலாம். ரேட் கொஞ்சம் அதிகமாகும். கவுன்சிலிங் நட்க்கும் பொழுது புக் செய்தால் ரேட் ரொம்ப அதிகமாகும். சீட்டே இல்லாமலும் போகலாம்.

7. கல்லூரியின் மேனேஜ்மெண்ட் விருப்பத்தைப் பொறுத்து டொனேசன் மாறுபடும். கல்லூரி நடத்துபவர்கள் உங்கள் சாதி/மதமாக இருந்தால் டொனேசனை கொஞ்சம் பேசிக் குறைக்கலாம். குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியில், அவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு குறைக்க வாய்ப்பு உண்டு.

8. ஒரு தனியார் கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேனேஜ்மெண்ட் வழியில் செல்ல நீங்கள் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது கவுன்சிலிங்கிற்கு முன்னால் நடக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.. உங்கள் மதிப்பெண்களை வைத்து, கவுன்சிலிங்கில் அதே கல்லூரி, அதே பிரிவை நீங்கள் அரசு வழியில் தேர்ந்தெடுத்தால், பல கல்லூரிகளில் உங்கள் அட்வான்சை திருப்பி கொடுத்து விடுவார்கள். (திருப்பி கொடுக்க மாட்டார்கள், கல்லூரி கட்டணத்தில் கழித்துக் கொள்வார்கள்.) இதை முதலிலேயே பேசி வைத்துவிட வேண்டும்.



‘நன்றாக படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்ந்தெடுத்த கல்லூரி நல்ல காலேஜாகத்தான் இருக்கும்' என்றும் நமக்கு தோன்றும். இதற்கு முந்திய வருடத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு பிரிவிலும் எந்த அளவு மார்க் வாங்கியிருந்தால் சீட் கிடைத்தது என்ற விவரம் அண்ணா பல்கலைக் கழக வெப்சைட்டில் இருக்கிறது. இதை வைத்து எது நல்ல கல்லூரி என்பதை ஓரளவு கணிக்கலாம்.

எடுத்துக் காட்டாக, போன வருடம், CEG காலேஜில், 'ஈ.சீ.ஈ.' எடுக்க பொதுப் பிரிவில் 200க்கு 200 எடுத்தவர்களுக்கு மட்டும் கிடைத்தது, முஸ்லிம் கோட்டாவில் 199.25க்கு மேலும், கிருஸ்துவர் கோட்டாவில் 199.5க்கு மேலேயும், பி.சி. கோட்டாவில் 199.75க்கு மேலும், ஓ.பி.சி.யில் 199.25க்கு மேலேயும், எஸ்.சி.யில் 198க்கு மேலும், எஸ்.டி.பிரிவில் 195.25க்கு மேலும் எடுத்திருக்க வேண்டும். நீங்கள் முஸ்லிமாக இருந்து உங்கள் மதிப்பெண் 199.25க்கு மேலே இருந்தால், பொதுப் பிரிவிலோ அல்லது முஸ்லிம் பிரிவிலோ சீட் கிடைக்கும். இதைவிட மதிப்பெண் குறைவாக இருந்தால், வேறு கல்லூரியோ அல்லது சிவில், மெக்கானிகல் போல வேறு பிரிவோ தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும்.

இதை வைத்து, இந்த வருடத்திலும் கட்-ஆஃப் மார்க் எவ்வளவு இருக்கும் என்பதை ‘ஓரளவு தோராயமாக' கணிக்கலாம். நீங்கள் 190 மார்க் எடுத்தால், இந்த காலேஜில் ஈ.சீ.ஈ. கிடைக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லி விடலாம். இது போல வேறு கல்லூரிகளிலும், வேறு பிரிவுகளிலும் போன வருட கட் ஆஃப் பார்த்தால் (1) உங்கள் மார்க்கிற்கு என்ன கிடைக்கும் என்பது சுமாராகத் தெரியும் (2) போன வருடம் மாணவர்கள் எந்த கல்லூரி/ எந்தப் பிரிவை விரும்பி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் தெரியும்.

ஏதாவது ஒரு கல்லூரியில், ஈ.சீ.ஈ. க்கு கட் ஆஃப் மார்க் 150 அல்லது 160 என்று இருந்தால், “பொதுவாக மாணவர்கள்/பெற்றோர்களுக்கு அந்தக் கல்லூரி பற்றி உயர்ந்த எண்ணம் இலலை” என்று புரிந்து கொள்ளலாம். அது போல ஈ.சீ. ஈ. க்கு கட் ஆஃப் மார்க் 195 என்று இருந்தால், பலர் இந்த கல்லூரி பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு கல்லூரி/பிரிவை தேர்ந்தெடுக்கும் பொழுது பெரும்பாலானவர்களின் கவலை “இதை முடித்ததும் நல்ல வேலை கிடைக்குமா?” என்பதே. நாலு வருடம் கழித்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, இருந்தாலும் இது இயற்கையாக நம் மனதில் தோன்றும் கேள்வி.

”இதற்கு முன் இந்தக் கல்லூரி இந்தப் பிரிவில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைத்தால், நமக்கும் நாம் படிப்பை முடிக்கும்போது வேலை கிடைக்கும்” என்ற நம்பிக்கை வரும். ஒரு கல்லூரியில் ஒரு பிரிவில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் வேலை கிடைத்தது என்பதை ‘100% ப்ளேஸ்மெண்ட்' என்று சொல்வார்கள். இதில் சில கல்லூரிகள் தப்புக்கணக்கு காட்டுகின்றன. விவரங்கள் அடுத்த பதிவில்.

Sunday, March 22, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை

இப்போது +2 தேர்வுகள் முடிகின்றன. நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்களோ தமிழ் நாட்டில் பொறியியல் (என்ஜினியரிங்) கல்லூரியில் சேர விரும்பினால், உங்களுக்கு கீழே இருக்கும் விவரங்கள் உதவலாம்.

  1. தமிழ் நாட்டில், அரசு நேரடியாக அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நான்கு கல்லூரிகளை நடத்துகிறது.இவை 1. CEG என்று அழைக்கப் படும் College of Engineering , 2. AC Tech என்று அழைக்கப படும் Alagappa College of Technology , 3. SAP என்று அழைக்கப்படும் School of Architecture and planning , 4. MIT என்று அழைக்கப்படும் Madras Institute of Technology ஆகும்.


  2. இது தவிர அரசு கோயம்புத்தூர், திருநெல்வேலி, பருகூர், சேலம் என்று பல இடங்களில் பொறியியல் கல்லூரிகளை நடத்துகிறது.

  3. அடுத்து, தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன.


இந்த அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் எல்லாம் அண்ணா பல்கலைக் கழக விதிமுறைகள் கீழே வரும். அண்ணா பல்கலையில் இருக்கும் நான்கு கல்லூரிகளுக்கும், தவிர தமிழ் நாட்டில் இருக்கும் அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், இந்த எல்லா இடங்களிலும் சேர்வதற்கு ஒரே ஒரு அப்ளிகேசன் தான் போட வேண்டும். இதில் நீங்கள் விரும்பும் கல்லூரியில், விரும்பும் பிரிவில் சேர முடியுமா என்பது, உங்கள் +2 மதிப்பெண்களைப் பொறுத்து இருக்கும். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலில் அதிகம் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

அண்ணா பல்கலை வளாகக் கல்லூரிகளிலும், அரசு கல்லூரிகளிலும் சேருவதற்கு நன்கொடை என்ற டொனேசன் கிடையாது. இதில் வருடம் கட்ட வேண்டிய கட்டணமும் மிக அதிகமாக இருக்காது.

தனியார் கல்லூரியில் அரசு மூலமும் சேரலாம், மேனேஜ்மெண்ட் என்ற தனியார் மூலமும் சேரலாம். அரசு மூலம் சேர்ந்தால் டொனேசன் கிடையாது. கல்லூரிக் கட்டணம், அரசு கல்லூரியில் வாங்குவதை விட அதிகமாக இருக்கும். இதிலும், உங்கள் மதிப்பெண்களைப் பொறுத்தே முன்னுரிமை இருக்கும்.

தனியார் மேனேஜ்மெண்ட் மூலம் சேர ஒவ்வொரு கல்லூரிக்கும் தனி அப்ளிகேசன் வாங்க வேண்டும். இதில் டொனேஷன் இருக்கும். இது சில லட்சங்கள் இருக்கும். இது நீங்கள் கேட்கும் பிரிவு, உங்கள் வீட்டு வருமானம், உங்கள் மதம் ஆகியவற்றை சார்ந்து மாறுபடலாம். மதிப்பெண்ணுக்கு அதிக மதிப்பு (!) இருக்காது. இந்த வழியில் சேர்ந்தால் வருடக் கட்டணம், மிக அதிகமாக இருக்கும். அப்ளிகேசன் வாங்கவே ஆயிரம் ரூபாய் போன்ற ரேஞ்சில் பணம் கட்ட வேண்டி இருக்கலாம்.

இதில் ஒரு சில தனியார் கல்லூரிகளில் விதி விலக்கு உண்டு. ஆனால் பெரும்பாலான கல்லூரிகள் மேலே சொன்னபடிதான் நடக்கின்றன. எனக்கு தெரிந்த விதிவிலக்குகள் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

4. இவை எல்லாம் தவிர சில கல்லூரிகள் ‘பல்கலைக் கழக' அந்தஸ்து (Deemed university status) பெற்றுள்ளன. அவை அண்ணா பல்கலை கழகத்தின் கீழே வராது. வேலூரில் இருக்கும் ‘வி.ஐ.டி.', சென்னையில் இருக்கும் ‘எஸ். ஆர். எம்.', தஞ்சாவூரில் இருக்கும் ‘சாஸ்த்ரா' போன்றவை இதில் அடங்கும். இவற்றிற்கு எல்லாம் தனித்தனியே அப்ளிகேசன் வாங்க வேண்டும். இதிலும் அப்ளிகேசன் வாங்க ஆயிரம் ரூபாய் ரேஞ்சில் பணம் கட்ட வேண்டி இருக்கலாம். டொனேசனும் கொடுக்க வேண்டி இருக்கும்.

இப்போது உங்களுக்கு +2வில் எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பது உங்களுக்கு தோராயமாக தெரியும். இன்னும் சில வாரங்களில் சரியாகத் தெரிந்து விடும். உங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ற நல்ல கல்லூரியையும், நல்ல பிரிவையும் தேர்ந்தெடுப்பது எப்படி?

அதற்கு முன், அரசு கல்லூரிகள் என்ன என்ன இருக்கின்றன? தனியார் கல்லூரிகள் என்ன இருக்கின்றன? இவற்றில் எது நல்ல கல்லூரி என்பதை தேர்ந்தெடுப்பது எப்படி? சில தனியார் கல்லூரிகளின் ‘தில்லாலங்கடி' வேலைகளைப் புரிந்து கொள்வது எப்படி? இவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.