Friday, November 21, 2008

வெளிநாட்டில் மேல்படிப்பு - ஆராய்சி கட்டுரை எழுதுவது

வெளிநாட்டில் மேல்படிப்பிற்கு அப்ளிகேசன் போடும்பொழுது, நீங்கள் ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருந்தால், உங்களுக்கு அட்மிஷனும் ஸ்காலர்ஷிப்பும் கிடைப்பது எளிது என்பதை முன்னால் பார்த்தோம். ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் ஐ ஐ டி, ஐ.ஐ.எஸ்.சி (பெங்களூரு), அண்ணா பல்கலைக் கழகம் (சென்னை) இது போன்ற இடங்களில் இருக்கும் பேராசிரியர்களுக்கும் ஆராய்ச்சி கட்டுரை எழுதுவது முக்கியம். அவர்களிடம் experiment செய்ய வசதியும், கம்ப்யூட்டர் வசதிகளும் மற்ற இந்திய கல்லூரிகளைக் காட்டிலும் நன்றாக இருக்கும். இந்த இடங்களில் summer internship செய்தால், உங்கள் பெயருடன் ஆராய்ச்சி கட்டுரை வர வாய்ப்பு அதிகம். ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி. , டாடா ஆராய்ச்சி நிறுவனம் (TIFR) போன்றவை, வெளிக் கல்லூரி மாணவர்களுக்கு அஃபிஷியலாகவே ‘சம்மர் இண்டர்ன்ஷிப்' என்று ஒரு ப்ரோகிராம் ஒவ்வொரு வருடமும் வெளியிடும். இதை நீங்கள் நடுநடுவில் கூகிளில் சென்று தேடி தெரிந்து கொள்ள வேண்டும். இவை ஜனவரி, பிப்ரவரி சமயம் விளம்பரம் வரும். இதில் தேர்ந்தெடுக்கப் பட்டால், உங்களுக்கு தங்க இடமும், கொஞ்சம் ஸ்காலர்ஷிப்பும் கொடுத்து சுமார் இரண்டு மாதங்கள் ஒரு ப்ராஜக்டும் கொடுப்பார்கள். இங்கே முக்கியமானது ஸ்காலர்ஷிப் அல்ல. அந்த இரண்டு மாதம் நன்றாக வேலை செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்.

இதன் மூலம், நீங்கள் அமெரிக்க கல்லூரிக்கு அப்ளிகேசன் போடும்பொழுது, இந்த ப்ரொபசரிடமும் ‘ரெகமண்டேசன் லெட்டர்' வாங்கலாம். இந்த லெட்டருக்கு கொஞ்சம் அதிக மதிப்பு இருக்கும். இது ‘ஐ ஐ டி' யிலிருந்து வந்ததால் அல்ல; உங்களுடன் தொடர்பில்லாத, உங்கள் முன்னேற்றத்தால் லாபம் பெறாத ஒரு நபரிடம் இருந்து வருவதால். இந்த லாஜிக் என்ன என்றால், ‘உங்கள் கல்லூரி ப்ரொபசர் எப்படியும் உங்களுக்கு நல்ல ரெகமண்டேசன் கொடுப்பார், அவர் உண்மை சொல்கிறாரா என்பது தெரியாது, தன் காலேஜிக்கு நல்ல பெயர் வேண்டும் என்பதால் அப்படித்தான் கொடுப்பார். ஆனால், நீங்கள் வெளியில் இரண்டு மாதம் வேலை செய்த பொழுது, சரியாக வேலை செய்யாவிட்டால், அந்த ப்ரொபசர் நல்ல ரெகமண்டேசன் கொடுக்க மாட்டார்' என்பதாகும். இது முதல் பயன்.

இரண்டு மாத ப்ராஜக்டில் ஆராய்ச்சி கட்டுரை வர சாத்தியம் குறைவே. ஆனால், பெரும்பாலும் என்ன விதமான ப்ராஜக்ட் கொடுப்பார்கள் என்றால், ஒரு பெரிய (ஆறு மாதம் ஆகும்) ப்ராஜக்டில் ஒரு பகுதியை எடுத்துக் கொடுப்பார்கள். மற்ற மாணவர் யாராவது மற்ற பகுதிகளை செய்து கொண்டிருப்பார். நீங்கள் நல்ல படி வேலை செய்தால், மற்ற மாணவரின் வேலையையும் சேர்த்து ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதுவார்கள். அதில் உங்கள் பெயரும் வரும். வர வேண்டும் (ஆராய்ச்சியில் உண்மையிலேயே உங்கள் பங்கு இருந்தால்).

ஆராய்ச்சி ஓரளவு முன்னேறி இருந்தால், அதை கான்பரன்ஸில் எழுதுவார்கள், சொல்வார்கள். கான்பரன்ஸில் வெளியிட அது முழுக் கட்டுரையாக இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தியாவில்
ஒரு கான்பரன்ஸில் வெளிவந்தால் அதற்கு கொஞ்சம் மதிப்பு. ஒரு இண்டெர்நேசனல் கான்பரஸில் வந்தால் அதிகம் மதிப்பு. கான்பரன்ஸில் உங்கள் வேலை வந்தால் அதை அப்ளிகேசனில் குறிப்பிடலாம். அதற்கு ஓரளவு மதிப்பு உண்டு. இது இரண்டாம் பயன்.

(குறிப்பு: டெக்னிகல் விழா என்ற பெயரில் நடக்கும் ‘சாஸ்த்ரா', ‘அல்கெமி', ‘மெகானிகா' என்ற நிகழ்ச்சிகளில் கலந்து பரிசு வாங்கினால் அதற்கு அவ்வளவாக மதிப்பு இல்லை. ஏனென்றால் இந்த நிகழ்ச்சிகளில் பரிசு வாங்கினால் ‘இந்த மாணவர் வேலை செய்தால் ஆராய்ச்சி கட்டுரை நிறைய வரும்' என்று சொல்ல முடியாது. உங்களின் எந்த ஒரு திறமையையும், அமெரிக்க ப்ரொபசர் எடை போடும் போது இந்த பாயிண்ட் தான் திரும்பத் திரும்ப அவர் மனதில் வரும்)

இதே கான்பரன்சில் வருவதை விட, ஒரு ஜர்னல் (journal) என்ற மாதப் பத்திரிகையில் வந்தால் அதிக மதிப்பு. இதற்கு ஆராய்ச்சி கட்டுரை எழுத நிறைய பயிற்சி வேண்டும். நான் இப்படி ப்ளாக் எழுதுவது போல எழுதி அனுப்பினால், உடனே ‘ரிஜக்ட்' என்று வந்து விடும். இது கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி இல்லாததால், முதல் முறை சரியாக வராது. ஆனால் அமெரிக்க ப்ரொபசரும் இதைப்பற்றி அதிகம் கவலைப் படமாட்டார். ‘நீங்கள் நன்றாக ஆராய்ச்சி செய்து ரிசல்ட் கொண்டு வந்தால் போதும், எழுதுவதை நான் பாத்துக்கொள்கிறேன்' என்ற எண்ணத்தில் இருப்பார். அதனால், நீங்கள் ஆராய்ச்சி கட்டுரையை எழுதுவது பற்றி கவலைப்பட வேண்டாம். இதை ஐஐடி அல்லது அண்ணா பல்கலைக் கழக ப்ரொபசர் பார்த்துக்கொள்வார். ஏனென்றால் அவருக்கும் ஆராய்ச்சி கட்டுரை வெளிவருவது முக்கியம்.

இப்படி ஸ்காலர்ஷிப்புடன் சம்மர் இண்டெர்ன்ஷிப் ஒவ்வொரு டிபார்ட்மெண்டுக்கும் , ஒவ்வொரு ஐஐடியிலும் நாலு ஐந்துதான் இருக்கும். எல்லோருக்கும் அது கிடைக்காது. மற்றவர்கள் என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கும் வழி உண்டு. ஆனால் கொஞ்சம் அதிக வேலை செய்ய வேண்டும், தவிர செலவாகும்.

இண்டெர்னெட்டில் சென்று, ஒவ்வொரு ப்ரொபசரின் வெப்சைட்டையும் பார்க்க வேண்டும். அதில் யார் சமீபத்தில் (ஒரு இரண்டு வருடங்களில்) ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அவர் என்ன ஃபீல்டில் இருக்கிறார் என்பதையும் கவனிக்கவும். அது உங்களுக்கு பிடித்திருந்தால் மிக நல்லது. அப்படி எதுவும் குறிப்பிட்டு இல்லை என்றாலும் சரி. (நானும் கல்லூரியில் படிக்கும்பொழுது 'எதா இருந்தாலும் சரி' என்ற மனநிலையில்தான் இருந்தேன். ‘இந்த பீல்டுலதான் வேலை செய்வேன், வேற பீல்டில் செய்ய மாட்டேன்' என்று நினைக்கவில்லை). சமீபத்தில் கட்டுரை எழுதாதவர், ஆராய்ச்சியை நிறுத்தி விட்டிருக்கலாம், அதனால் அவரை விட்டு விடலாம்.

இப்படி சில ப்ரொபசர்களை செலக்ட் செய்யவும். ஒவ்வொருவரும் எந்த சப்ஜெக்டில் வேலை செய்கிறார்களோ, அதைப்பற்றி கூகிள், விக்கி போன்றவைகளில் சென்று படியுங்கள். அந்த ப்ரொபசர்களின் ஆராய்சி கட்டுரை கிடைத்தால் மிக நல்லது, அதை புரிந்த வரை படியுங்கள். இதை 5, அல்லது 6 ப்ரொபசர்களைப் பற்றிதான் செய்ய முடியும். நூறு பேர் பற்றி செய்ய முடியாது. அதனால், நன்றாக யோசித்து ப்ளான் செய்து படிக்க வேண்டும். ஒவ்வொரு ப்ரொபசரையும் செலக்ட் செய்த பிறகு 8 மணி நேரமாவது அவர் சப்ஜெக்ட் படிக்க ஒதுக்க வேண்டும்.

பிறகு, அவருக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு அவர் சப்ஜெக்டில் ஈடுபாடு இருக்கிறது என்றும், நீங்கள் அதைப்பற்றி கொஞ்சம் படித்ததில் இன்னும் அதிக ஆர்வம் வந்தது என்றும் சொல்லுங்கள். அவர் கட்டுரையைப் படித்திருந்தால் அதையும் சொல்லவும். பிறகு ‘எனக்கு டிசம்பரில் 30 நாள் லீவு, சம்மரில் இத்தனை நாள் லீவு, நான் மேல் படிப்பு படிக்க விரும்புகிறேன். உங்களிடம் பயிற்சி பெற விரும்புகிறேன். இண்டெர்ன்ஷிப் வாய்ப்பு கொடுங்கள்' என்பதை எழுதுங்கள். மெயிலில் “Dear Professor XYZ" என்று அவர் பெயருடன் எழுதவும். அவர் சரி என்று சொன்னால், அந்த கல்லூரிக்கு பக்கத்தில் தங்க, கல்லூரிக்கு போய்வர நீங்கள் உங்கள் காசு செலவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்கள் குறிக்கோள், 1. நன்கு வேலை செய்து நல்ல ரெகமண்டேசன் வாங்க வேண்டும், 2. ஆராய்ச்சி கட்டுரை வரவேண்டும்.

நீங்கள் நன்கு வேலை செய்தால் நிச்சயம் நல்ல ரெகமண்டேசன் கிடைக்கும். ஆனால் ஆராய்ச்சி கட்டுரை வரும் என்று அடித்து சொல்ல முடியாது. லக் இல்லாவிட்டால் ஒரு வருடம் வேலை செய்தாலும் வராது. ஆனால், போகும்போது ஆப்டிமிஸ்டிக்காக போகவேண்டும்.

இப்படி மெனக்கெடாமல், எல்லா ப்ரொபசருக்கும் ‘Dear Sir/Madam, நான் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்,என் resume அட்டாச் செய்திருக்கிறேன், எனக்கு சம்மர் இண்டர்ன்ஷிப் கொடுங்கள்' என்று கேட்டால், அந்த மின்னஞ்சல் உடனே delete செய்யப்படும். இந்த மாதிரி அவர்களுக்கு தினமும் 10 மெயில் வரும், ஒவ்வொன்றுக்கும் பதில் அனுப்ப மாட்டார்கள். ‘நம்மை பற்றி படிக்க இந்த மாணவன் முயற்சி எடுக்கவில்லை, நாம் எதற்கு இந்த மாணவனைப்பற்றி , அவன் ரெசுமேயை படிக்க வேண்டும்?' என்ற எண்ணம் இயற்கையாகவே பல ப்ரொபசருக்கு தோன்றும். நீங்கள் இந்த 'கும்பலிலிருந்து தனித்து நிற்க வேண்டும்' (You have to stand out).அப்போதுதான் வாய்ப்பு அதிகம்.

No comments: