Wednesday, March 25, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை- பகுதி 3

சில தனியார் கல்லூரிகள், ‘100% ப்ளெஸ்மெண்ட்' இல்லாதபோதே, இருப்பது போல காண்பிக்கும். இதற்கு ஒரு குறுக்கு வழி உண்டு. இப்படி காண்பித்தால், புதிதாக வரும் மாணவர்கள்/பெற்றோர்கள் ‘சரி, இங்கே படித்தால், படித்து முடித்ததும் வேலை கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையில், டொனேசன் கட்டி சேருவார்கள்.

கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் (அதாவது கல்லூரி வழியாக வேலை கிடைப்பது) என்பது அண்ணா பல்கலைக் கழகம் நடத்துவது. அண்ணா பல்கலையின் கீழே இருக்கும் மாணவர்களை பல கம்பெனிகள் வந்து தேர்வு மற்றும் இண்டெர்வியூ வைத்து வேலைக்கு எடுத்துக் கொள்ளும். வேலைக்கு எடுத்துக் கொள்ளும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக் கழகம் மூலம் லெட்டர் கொடுக்கும். இதனால் அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், ‘இந்தக் கல்லூரியில், இந்தப் பிரிவில் இத்தனை மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது' என்ற புள்ளி விவரம் கிடைக்கும்.

இதில் எப்படி ஏமாற்ற முடியும்?

ஒரு எடுத்துக் காட்டாக “தில்லாலங்கடி காலேஜ்' என்று ஒரு காலேஜ் நான் நடத்துவதாக வைத்துக் கொள்வோம். எனது கல்லூரி மாணவர்களுக்கு ப்ளேஸ்மெண்ட் காண்பிக்க, என் நண்பரையோ அல்லது உறவினரையோ வைத்து “டுபாக்கூர் கம்பெனி' என்ற பெயரில் ஒரு கம்பெனியை ரெஜிஸ்டர் செய்து விடுவேன். அண்ணா பல்கலைக் கழகத்தில் சில ஆயிரங்கள் கட்டி விட்டு, அந்தக் கம்பெனி முதலாளியாக நண்பர் வந்து, என் கல்லூரி மாணவர்கள் பலருக்கு வேலை கொடுத்துவிட்டு போய் விடுவார். லெட்டரில் “மே மாதம் 15ம் தேதி வந்து சேர்ந்து விடுங்கள், உங்கள் சம்பளம் மாதம் 15 ஆயிரம் ரூபாய்” என்று இருக்கும். மாணவர்களும் ‘வேலை கிடைத்து விட்டது' என்ற மகிழ்ச்சியில் இருப்பார்கள்.

என்னைப் பொறுத்த வரை ” எங்கள் கல்லூரியில் எல்லா மாணவர்களுக்கும் வேலை கிடைத்து விட்டது, 100% ப்ளேஸ்மெண்ட். எங்கள் கல்லூரி மிகச் சிறந்த கல்லூரி” என்று வெளியில் சொல்லி விடுவேன்.

ஆனால் மாணவர்களுக்கு மே மாதம், இன்னோரு லெட்டர் வரும். ‘கம்பெனி நிலை சரியில்லாததால், அக்டோபர் 1ம் தேதி வந்து சேருங்கள்' என்று சொல்லும். அக்டோபரில் “அடுத்த ஜனவரி சேருங்கள்' என்று இன்னொரு லெட்டர் வரும். நேரில் போய் விசாரித்தால், ‘இப்போது வசதி இல்லை, வேண்டுமானால் சம்பளம் இல்லாமல் 3 மாதம் ட்ரெய்னிங் இருங்கள் பார்க்கலாம்' என்று சொல்வார்கள். மாணவர்களே வெறுத்துப் போய் வெளியே வேறு இடத்தில் வேலை தேடிக் கொள்வார்கள். மறுபடி இந்த டுபாக்கூர் கம்பெனி அண்ணா பல்கலைக்கு போய், அடுத்த பேட்ச் மாணவர்களுக்கு இண்டெர்வியூ வைக்கும். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுப்பது போல, ஒவ்வொரு கேம்பஸ் ப்ளேஸ்மெண்டிலும் போய் ”நிறைவேற்ற மாட்டோம்” என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டே லெட்டர் கொடுக்கும்.

மாணவர்கள் கல்லூரி விட்டு வெளிவந்த பிறகு ”இந்த கம்பெனி இப்படி அலைக்கழிக்கிறது” என்று அண்ணா பல்கலைக் கழகத்திற்கு போய் கம்ப்ளெய்ண்ட் கொடுப்பதற்கு பதிலாக வெறுத்துப் போய் விட்டு விடுவார்கள். அதிகம் பேர் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால், விவரம் மீறிப் போனால், இந்த டுபார்க்கூர் கம்பெனியை கேம்பஸ் ப்ளேஸ்மெண்ட் வராமல் தடுக்கலாம். ஆனால், அதே ஆள் இன்னொரு கம்பெனி பெயரில் இதே வேலையை செய்வதை அவ்வளவு சுலபமாகத் தடுக்க முடியாது.

சரி, இது மோசமான கல்லூரிக்கு அறிகுறி. எதை வைத்து ஒரு கல்லூரியை ‘இது நல்ல கல்லூரி' என்று சொல்வது?

No comments: