Monday, March 23, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை- பகுதி 2

தமிழக எஞ்சினியரிங் கல்லூரிகள் பற்றிய சில விவரங்களையும், மதிப்பீடுகளையும் பார்க்கலாம்.

டிஸ்கி: இந்த விவரங்கள் ‘காத்து வாக்கில்' வந்த செய்திகளை வைத்து எழுதுவது. குறிப்பாக சில விவரங்களை சொன்னவர்கள், அவர்கள் பெயர்கள் வெளி வருவதை விரும்பவில்லை. “அவர்கள் நேர்மையாகவும் சரியாகவும் சொல்லுகிறார்கள், அவர்களுக்கு விவரம் நன்றாகத் தெரியும்” என்ற நம்பிக்கையில் நான் இங்கு எழுதுகிறேன்.

1. அரசு கல்லூரிகள் அனைத்தும் ஒரே லெவலில் இருப்பதில்லை. எ.கா. கோயம்புத்தூரில் இருக்கும் அரசு கல்லூரி, பருகூரில் இருக்கும் அரசு கல்லூரியை விட பல மடங்கு சிறந்தது. இது பற்றி மேலும் விவரங்களைப் பின்னர் பார்க்கலாம்.

2. சில தனியார் கல்லூரிகள் சில அரசு கல்லூரிகளை விட பரவாயில்லை.

3. தனியார் கல்லூரியில் ஒன்றான ‘சி.ஐ.டி' என்ற கோயம்புத்தூர் இன்ஸ்டிடுட் ஆஃப் டெக்னாலஜி' தனது எல்லா சீட்டுக்களையும் அரசுக்கே தந்து விடுகிறது. இதில் மேனேஜ்மெண்ட் கோட்டா என்பது கிடையாது. (இவ்விவரம் சரியா என்று நிச்சயமாகத் தெரியவில்லை).

4. சென்னையில் இருக்கும் ‘எஸ்.எஸ்.என்' என்ற ‘சிவசுப்ரமணியம் நாடார் கல்லூரி'யில் டொனேசன் வாங்குவதில்லை. தனியார் மேனேஜ்மெண்ட் வழியில் மாணவர்களை ‘எக்சாம்' வைத்து எடுக்கிறார்கள். பணம் கொடுத்து சீட் வாங்க முடியாது. நன்றாக மார்க் வாங்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கொடுக்கிறார்கள்.

5. 'ஈ.சீ.ஈ' என்ற எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் பிரிவைத்தான் மாணவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதனால், டொனேசனுக்கும் அதற்குதான் அதிகம். 3 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை நல்ல பெயர் வாங்கிய தனியார் கல்லூரிகளில் கேட்கிறார்கள்.

6. தனியார் கல்லூரி/ ‘பல்கலை'யில், மார்க் வரும் முன்னரே நீங்கள் கொஞ்சம் ‘அட்வான்ஸ்' கொடுத்தால், சீட் புக் செய்து கொள்ளலாம். மார்க் வந்த பின், கவுன்சலிங் வரும் முன்னும் புக் செய்து கொள்ளலாம். ரேட் கொஞ்சம் அதிகமாகும். கவுன்சிலிங் நட்க்கும் பொழுது புக் செய்தால் ரேட் ரொம்ப அதிகமாகும். சீட்டே இல்லாமலும் போகலாம்.

7. கல்லூரியின் மேனேஜ்மெண்ட் விருப்பத்தைப் பொறுத்து டொனேசன் மாறுபடும். கல்லூரி நடத்துபவர்கள் உங்கள் சாதி/மதமாக இருந்தால் டொனேசனை கொஞ்சம் பேசிக் குறைக்கலாம். குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியில், அவர்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு குறைக்க வாய்ப்பு உண்டு.

8. ஒரு தனியார் கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் மேனேஜ்மெண்ட் வழியில் செல்ல நீங்கள் அட்வான்ஸ் கொடுத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது கவுன்சிலிங்கிற்கு முன்னால் நடக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.. உங்கள் மதிப்பெண்களை வைத்து, கவுன்சிலிங்கில் அதே கல்லூரி, அதே பிரிவை நீங்கள் அரசு வழியில் தேர்ந்தெடுத்தால், பல கல்லூரிகளில் உங்கள் அட்வான்சை திருப்பி கொடுத்து விடுவார்கள். (திருப்பி கொடுக்க மாட்டார்கள், கல்லூரி கட்டணத்தில் கழித்துக் கொள்வார்கள்.) இதை முதலிலேயே பேசி வைத்துவிட வேண்டும்.



‘நன்றாக படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்ந்தெடுத்த கல்லூரி நல்ல காலேஜாகத்தான் இருக்கும்' என்றும் நமக்கு தோன்றும். இதற்கு முந்திய வருடத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு பிரிவிலும் எந்த அளவு மார்க் வாங்கியிருந்தால் சீட் கிடைத்தது என்ற விவரம் அண்ணா பல்கலைக் கழக வெப்சைட்டில் இருக்கிறது. இதை வைத்து எது நல்ல கல்லூரி என்பதை ஓரளவு கணிக்கலாம்.

எடுத்துக் காட்டாக, போன வருடம், CEG காலேஜில், 'ஈ.சீ.ஈ.' எடுக்க பொதுப் பிரிவில் 200க்கு 200 எடுத்தவர்களுக்கு மட்டும் கிடைத்தது, முஸ்லிம் கோட்டாவில் 199.25க்கு மேலும், கிருஸ்துவர் கோட்டாவில் 199.5க்கு மேலேயும், பி.சி. கோட்டாவில் 199.75க்கு மேலும், ஓ.பி.சி.யில் 199.25க்கு மேலேயும், எஸ்.சி.யில் 198க்கு மேலும், எஸ்.டி.பிரிவில் 195.25க்கு மேலும் எடுத்திருக்க வேண்டும். நீங்கள் முஸ்லிமாக இருந்து உங்கள் மதிப்பெண் 199.25க்கு மேலே இருந்தால், பொதுப் பிரிவிலோ அல்லது முஸ்லிம் பிரிவிலோ சீட் கிடைக்கும். இதைவிட மதிப்பெண் குறைவாக இருந்தால், வேறு கல்லூரியோ அல்லது சிவில், மெக்கானிகல் போல வேறு பிரிவோ தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கும்.

இதை வைத்து, இந்த வருடத்திலும் கட்-ஆஃப் மார்க் எவ்வளவு இருக்கும் என்பதை ‘ஓரளவு தோராயமாக' கணிக்கலாம். நீங்கள் 190 மார்க் எடுத்தால், இந்த காலேஜில் ஈ.சீ.ஈ. கிடைக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லி விடலாம். இது போல வேறு கல்லூரிகளிலும், வேறு பிரிவுகளிலும் போன வருட கட் ஆஃப் பார்த்தால் (1) உங்கள் மார்க்கிற்கு என்ன கிடைக்கும் என்பது சுமாராகத் தெரியும் (2) போன வருடம் மாணவர்கள் எந்த கல்லூரி/ எந்தப் பிரிவை விரும்பி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் தெரியும்.

ஏதாவது ஒரு கல்லூரியில், ஈ.சீ.ஈ. க்கு கட் ஆஃப் மார்க் 150 அல்லது 160 என்று இருந்தால், “பொதுவாக மாணவர்கள்/பெற்றோர்களுக்கு அந்தக் கல்லூரி பற்றி உயர்ந்த எண்ணம் இலலை” என்று புரிந்து கொள்ளலாம். அது போல ஈ.சீ. ஈ. க்கு கட் ஆஃப் மார்க் 195 என்று இருந்தால், பலர் இந்த கல்லூரி பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு கல்லூரி/பிரிவை தேர்ந்தெடுக்கும் பொழுது பெரும்பாலானவர்களின் கவலை “இதை முடித்ததும் நல்ல வேலை கிடைக்குமா?” என்பதே. நாலு வருடம் கழித்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, இருந்தாலும் இது இயற்கையாக நம் மனதில் தோன்றும் கேள்வி.

”இதற்கு முன் இந்தக் கல்லூரி இந்தப் பிரிவில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைத்தால், நமக்கும் நாம் படிப்பை முடிக்கும்போது வேலை கிடைக்கும்” என்ற நம்பிக்கை வரும். ஒரு கல்லூரியில் ஒரு பிரிவில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் வேலை கிடைத்தது என்பதை ‘100% ப்ளேஸ்மெண்ட்' என்று சொல்வார்கள். இதில் சில கல்லூரிகள் தப்புக்கணக்கு காட்டுகின்றன. விவரங்கள் அடுத்த பதிவில்.

No comments: