Saturday, April 18, 2009

தமிழக என்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை- பகுதி 4

இதற்கு முன் தமிழகத்தில் இருக்கும் என்ஜினியரிங் கல்லூரிகள் பற்றிய மேலோட்டமான விவரங்களைப் பார்த்தோம். அண்ணா பல்கலை, அரசு கல்லூரி, தனியார் கல்லூரி, தனியார் பல்கலை என்று இவற்றின் வகைகளையும் பார்த்தோம். எல்லா கல்லூரிகளும் ஒரு போல இல்லை. சிலவற்றை 'நல்லவை' என்று சிலவற்றை ‘உதவாதது' என்றும் மாணவர்கள்/பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பை வைத்து இது தீர்மானிக்கப் படுகிறது என்பதையும், சில தனியார் கல்லூரிகள் இதில் தில்லுமுல்லு செய்வது பற்றியும் பார்த்தோம்.

இனி, ஒரு கல்லூரியை எப்படி நல்ல கல்லூரியா இல்லையா என்று கணிப்பது? இது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒரு கல்லூரியில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் நல்ல வேலை கிடைத்தால் அதை நல்ல கல்லூரி என்று சொல்லலாம். இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். எல்லா மாணவர்களுக்கும் நல்ல கல்வி தந்தால், வேலை கிடைப்பது சுலபம். ஏனென்றால், தனியார் நிறுவனங்கள் விஷயம் தெரிந்த மாணவர்களை எடுக்கவே எப்போதும் விரும்பும். படிப்பு மட்டும் போதாது என்றாலும், நன்றாகப் பேசும் திறமை, பர்சனாலிடி என்று பல விஷயங்களுடன் படிப்பும் நிச்சயம் தேவை.

கல்லூரி மேனேஜ்மெண்ட் பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மாணவர்கள் நன்றாக கற்க ஏற்பாடு செய்தால் போதும். அதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவை. நல்ல ஆசிரியர்கள் வேண்டும் என்றால் ஓரளவாவது நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும். அதில் கஞ்சத்தனம் செய்து காசு பார்க்கும் கல்லூரிகளில் தான் கல்வி கற்பிப்பது மோசமாக இருக்கும்.

சில தனியார் கல்லூரிகளில், நாலாவது வருடம் கல்லூரி முடித்த மாண்வர்களையே ஆசிரியர்களாக எடுத்து மாதத்திற்கு 5,000 அல்லது 4,000 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். ஏனென்றால் நல்ல ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய்க்கும் மேல் கொடுக்க வேண்டி இருக்கும். ஒரு ஆசிரியருக்கு குறைந்த பட்சம் 8,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இந்த 'நாலாம் ஆண்டு முடித்த' ஆசிரியர்களிடம் 8000 ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கையெழுத்து வாங்கிக்கொண்டு கொஞ்சம் பணம் மட்டுமே கொடுப்பார்கள்.

இந்த மாணவர்களாவது நன்றாக சொல்லித்தருவார்களா என்றால் இல்லை. ஏனென்றால், ஓரளவு விஷயம் தெரிந்த மாணவன் வெளியில் தனியார் நிறுவனத்தில் 10,000 ரூபாய்க்காவது வேலையில் சேர்ந்திருப்பான். வெளியில் வேலை கிடைக்காத ‘மக்கு' மாணவன் தான் அடுத்த வருட மாணவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் சொல்லித்தர வருவான். அதிலும் கூட தனக்கு தெரிந்ததையாவது முழு ஈடுபாட்டுடன் சொல்லித்தர மாட்டான். ஏனென்றால், வெளியில் வேறு வேலை கிடைக்குமா என்ற தேடிக்கொண்டே, பாதி மனதையும் நேரத்தையும் அதில் செலவழித்துக் கொண்டே பாடம் நடத்துவதால், அதில் குறை அதிகமாக இருக்கும்.

(குறிப்பு: நான் இந்த மாணவ/ஆசிரியர்களைக் குறைகூற விரும்பவில்லை. அவர்கள் கஷ்டம் எனக்கு முழுதாகத் தெரியாது. ஒரு கல்லூரியில் சேரும்போது நாம் எதையெல்லாம் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட மட்டும் விரும்புகிறேன்).

அதைப் போலவே சில கல்லூரிகள் இன்னொரு விஷயத்திலும் கஞ்சத்தனத்தைக் காட்டும். அது என்ன என்று கேட்டால் ‘செய்முறை கூடங்கள்' என்ற லேப் (Lab). நல்ல செய்முறை கூடங்களுக்கு பல விலை உயர்ந்த கருவிகளை வாங்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக லொட்டு லொசுக்கு கருவிகளை வைத்து , அல்லது அது கூட வைக்காமல், சில கல்லூரிகள் நடக்கின்றன. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை விட கொஞ்சம் குறைவாகத்தான் விவரம் தெரிந்திருக்கும். ஒரு மெசினைப் பார்த்து ஆபரேட் செய்வதற்கும், புத்தகத்தில் மட்டும் படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

சரி இது வரை எல்லாம் ‘தியரடிக்கலாக' பார்த்து இருக்கிறோம். ‘இவை எல்லாம் நல்ல கல்லூரிகள்' என்று ஏதாவது லிஸ்ட் உண்டா?

உண்டு. இந்த லிஸ்டை நீங்களும் தயாரிக்கலாம். கடந்த ஒரு சில வருடங்களில் எந்த கல்லூரிகளை மாணவர்கள் விரும்பி எடுத்திருக்கிறார்கள் என்பதை வைத்து ஓரளவு சொல்ல முடியும். அடுத்து இந்த கல்லூரிகள் எல்லாம் சரியாக நடக்கின்றனவா, இங்கு செய்முறை/ஆய்வுக் கூடங்கள் நல்ல படி இருக்கின்றனவா என்று நடுநடுவில் அண்ணா பல்கலைக் கழகத்தில் இருந்தும், வேறு சில பல்கலைக் கழகத்தில் இருந்தும் சோதனைக்கு செல்வார்கள். அவர்களில் யாரையாவது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்து இருந்தால் அதன் மூலமும் இந்தத் தனியார் கல்லூரி பற்றி அறிந்து கொள்ள முடியும். அப்படி இப்படி சேர்த்த நல்ல கல்லூரிகளின் லிஸ்ட், அடுத்த பதிவில்.

No comments: